திரு. முத்து நெடுமாறன் அவர்களின் கருத்து

குறியீடு மாற்றம் என்பது, உடனுக்குடன் நடக்கும் ஒன்றல்ல. இது தமிழுக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

பல தரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திய காலத்தில், தகுதரம் (TSCII) அறிமுகப் படுத்தப்பட்ட போது, அனைவரும் உடனடியாக மாறவில்லை. அந்தக் குறியீடு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகே பலரும், அதிலும் புதியவர்கள் பெரும்பாலோரும், தகுதரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. தகுதர முயற்சிகள் தொடங்கப்பட்டபோதே, யூனிகோட் குறியீட்டு முறைக்கும், அப்போதுள்ள குழப்பத்திற்கும் இடைப்பட்ட ஒரு தீர்வாகத்தான் அது கருதப்பட்டது – இப்போதும் பலராலும் கருதப்பட்டு வருகிறது.

இன்று யூனிகோட் இயங்காத பழைய கணினி இயங்குதளங்கள் (Operating Systems) புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த கணினிகளில் யூனிகோட் முழுமையாக இயங்காது. எனவே, அனைத்துச் செயல்களுக்கும் இந்தக் கணினிகளில் யூனிகோட்டை பயன்படுத்த இயலாது. இந்தக் கணினிகள் மேம்பாடு காணக்காண, யூனிகோடின் புழக்கம் அதிகரித்துக் கொண்டே வரும்.

மேலும், தமிழ் யூனிகோட் முறையை தடையின்றி வழங்கும் செயலிகளும் இப்போது தான் வந்து கொண்டு இருக்கின்றன. பரவலாக பயன்படுத்தும் செயலிகள் முழுமையாகத் தமிழ் யூனிகோட் முறையை வழங்கும் போது, மாற்றம் விரைவாகவே ஏற்படும் என்பது எமது நம்பிக்கை.

இப்போது உள்ள செயலிகளில், தகவல் பரிமாற்றம், இணைய பக்க/தல பதிப்பு, மின் இதழ்கள், வலைப்பூக்கள் – இவற்றில் எல்லாம் தமிழ் யூனிகோடின் பயன்பாடு பெருகி வருவதைக் காணலாம். வளர்ச்சிக்கு இது ஒரு நல்ல சான்று.

MS Office, OpenOffice.Org முதலிய பல செயலித் தொகுப்புகள் தமிழ் யூனிகோட்டை வழங்குவதும், விண்டோஸ் முறையைத் தவிர்த்து லினக்ஸ் மற்றும் அன்மையில் வெளியீடு கண்ட புதிய மெக்கிண்டாஷ் இயங்குதளங்கள் தமிழ் யூனிகோட் அமைப்பை அடிப்படையிலேயே வழங்குவதும் வரவேற்கத் தக்க செய்திகள். வளர்ச்சிக்கும், பயன்பாட்டுப் பெருக்கத்திற்கும், இவை ஆதரவளிக்கும்.

விதை விதைத்த உடனே பழம் கிடைக்காது. மாற்றம் என்பதை மெதுவாகத்தான் காண முடியும். யூனிகோடை பொருத்தவரை, “இதன் பிறகு இன்னொரு மாற்றம் இருக்குமோ?” என்ற ஐயம் இருக்க வேண்டியதில்லை. எனவே, தாமதமான ஏற்பைக் கண்டாலும், தகுந்த ஒரு மாற்றம் என்பதை பயனர் உணர்வர்.

பயனாளர்களுக்கு குறியீட்டு முறையைப் பற்றிய விவரங்களை விட, அவரவரின் தேவை நிறைவேற்றப்படுகிறதா என்பதே முக்கியம். ஒரு ஆவணத்தைத் தொகுக்கும் போது, ஒரே ஒரு பட்டன் அவர்களுக்குத் தமிழை முழுமையாக வழங்க வேண்டும். விசைப் பலகையை மாற்ற ஒன்று, எழுத்துருவை மாற்ற ஒன்று, குறியீட்டு முறையை மாற்ற ஒன்று — என்பதெல்லாம் குழப்பத்தையே விளைவிக்கும்.

மலேசியாவில், ஐந்து மொழிகள் ஒரே செயலியில் இயங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது: ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ், அரபு. ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாறுவதும், கோர்க்கப்பட்ட ஒரு சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் யூனிகோட் முறை மட்டுமே வழிவகுக்கும். இந்த முக்கியமான பொறுப்பு செயலிகளின் உள்ளேயே அமைந்திருக்க வேண்டும்.