கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் – தீர்வுக்கு என்ன வழி?

கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக்கை உண்பதை கேள்விப்படுகிறோம்.

அதற்குக் காரணம் பிளாஸ்டிக் பார்க்க அந்த உயிர்களின் உணவைப் போலவே காட்சியளிப்பது மட்டுமல்லாது, அவற்றின் உணவைப் போன்ற மணத்தையும் கொண்டுள்ளன.

“நீரிலிருந்து எடுத்த ஒரு பிளாஸ்டிக் துண்டை நுகர்ந்து பாருங்கள். அதில் மீன் போன்றே வாசனை வரும்,” என்கிறார் ராயல் நெதர்லாந்து இன்ஸ்டிட்யூட் ஆஃப் சீ ரிசர்ச் எனும் கடல்வாழ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் ஆய்வாளர் எரிக் ஜெட்லர்.

அப்படி மணம் வரக்காரணம் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது நுண்ணுயிர்கள் சூழ்ந்து, அவற்றின் மீது, ‘பிளஸ்டிஸ்பியர்’ எனும் ஒரு அடுக்காகப் படர்வதுதான் என்கிறார் எரிக்.

“இந்த நுண்ணுயிர்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள் கடல்வாழ் உயிர்களின் உணவைப் போன்ற சுவை மற்றும் மணத்தைத் தருகின்றன. பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் டைமெத்தைல் சல்ஃபைடு எனும் வேதிப்பொருள் கடல்வாழ் உயிர்கள் மற்றும் மீன்களைக் கவர வல்லன.”

தங்கள் உணவின் மணத்தைக் கொண்டு கண்டறியும் கடல்வாழ் பறவைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கூற்று பொருந்திப் போகலாம். ஆனால், திமிங்கலங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வது ஏன்?

அவை நீரை உட்கொள்ளும்போது தவறுதலாக பிளாஸ்டிக் பொருட்களையும் விழுங்கி விடுகின்றன.

கடல்களில் அதிகரிக்கும் பிளாஸ்டிக்

2015இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆண்டொன்றுக்கு கடலில் மட்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. அதாவது 8,00,00,00,000 (800 கோடி) கிலோ பிளாஸ்டிக் .

கடலுக்குள் தேங்கியிருக்கும் நீர் மட்டுமல்லாது நீரோட்டமும் இருக்கும். அவை ‘பெருங்கடல் நீரோட்டம்’ (ocean current) எனப்படும்.

இந்த நீரோட்டங்களுக்குள் சென்று சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாக நுணுங்கிவிடும். அந்தத் துகள்கள் கடைசியில் கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படுகின்றன.

ஆனால், ராஸ்கில்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் சைபர்க் கடலில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவு அதைவிடவும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்.

“80 லட்சம் டன் என்பது குறைவாக இருக்க இரு காரணங்கள். முதலாவது, கடலில் மேற்பரப்பில் இருக்கும் பிளாஸ்டிக் கணக்கீட்டில் 0.3 மில்லி மீட்டர் அளவைவிட சிறியதாக இருக்கும் கழிவுகளை சேர்ப்பதில்லை.”

“இரண்டாவது, மேற்பரப்பில் இருக்கும் கழிவுகளை மட்டுமே வைத்து முழு அளவையும் சொல்ல முடியாது. காரணம், மேலே மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருக்கும் ஒட்டுமொத்த பிளாஸ்டிக்கில் ஒரு மிகச்சிறிய பங்கு மட்டுமே,” என்று அவர் வாதிடுகிறார்.

கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், 2025இல் அதன் அளவு 1.75 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று 2015 மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை எச்சரிக்கிறது.

தீர்வுக்கு வழி என்ன?

பிளாஸ்டிக்குகள் தொடர்ந்து கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படும் சமயத்தில், அவற்றுக்கான பாதுகாப்பான மாற்றை பெரும் அளவில் உற்பத்திக்கு ஏற்ற வகையில் ஏன் அறிவியல் தொழில்நுட்ப உலகம் உருவாக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கடல் சூழலியல் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஆய்வாளர் மார்க் பிரவுன் பிபிசி உடனான முந்தைய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தார்.

“பிளாஸ்டிக் பொருட்களை கடல்வாழ் உயிர்கள் உண்ணக் காரணமான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, பிளாஸ்டிக் உற்பத்தியின்போது அவற்றைத் தவிர்க்க பொறியாளர்களும் சூழலியலாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.”

பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிர்களுக்கு உண்டாக்கியுள்ள பாதிப்பின் அளவு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

“திமிங்கிலங்கள், பறவைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஓரளவு தெரியும். தொண்டையில் பிளாஸ்டிக் சிக்கி, அவற்றின் உணவுப் பாதையை கிழித்ததாலோ அல்லது அடைத்ததாலோ அவை உயிரிழக்கின்றன,” என்கிறார் சைபர்க்.

பிபிசியின் புளூ பிளானட் – 2 தொடருக்கான படப்பிடிப்பின்போது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில், ஆல்பட்ராஸ் பறவையின் (அண்டரண்டப் பறவை) குஞ்சுகளின் உணவுப் பாதையில் சிறு பிளாஸ்டிக் துண்டுகள் சிக்கிக்கொண்டிருந்ததை படக்குழுவினர் கண்டறிந்தனர்.

“அதை உணவு என நினைத்து, தாய் அல்லது தந்தை பறவை அக்குஞ்சுகளுக்கு ஊட்டியிருக்கலாம்,” என்று அந்நிகழ்ச்சியின் தாயாரிப்பாளர் ஜேம்ஸ் ஹனிபார்ன் கூறியிருந்தார். அவற்றில் ஒரு குஞ்சு பிளாஸ்டிக், வயிற்றைக் கிழித்ததால் உயிரிழந்தது.

பிளாஸ்டிக் கடலில் கலப்பதை தடுப்பது எப்படி?

பசிஃபிக் பெருங்கடலை சுத்தப்படுத்த, ‘ஓஷன் கிளீன் அப்’ எனும் பெரு முயற்சி ஒன்று செப்டம்பர் 8 அன்று தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மாதம் 500 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து அகற்றப்படும். 2040இல் கடலில் சேரும் கழிவுகளை 90% குறைப்பதே இதன் இலக்கு.

பிளாஸ்டிக் கடலில் சேரும் கடலோரப் பகுதிகளை இலக்கு வைத்து செயல்பட்டால் இந்த முயற்சி பலனளிக்கும் என்கிறார் சைபர்க். ஆனால், இறுதித் தீர்வு என்பது கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருப்பதுதான்.

பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியக் கடல், மத்தியதரைக் கடல் உள்ளிட்ட பல்வேறு கடல் பரப்புகளில் பயணித்து, சுமார் 60 பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பயணங்களில் பங்கேற்றுள்ளார் எரிக் ஜெட்லர்.

இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார் அவர்.

மனிதர்களின் செயல்பாடுகள், அரசாங்க விதிமுறைகள், தொழில்துறையினரின் பங்கெடுப்பு ஆகியவை மூலமே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்கிறார் அவர்.