ஒரு ஞாயிறு மாலை

ஒரு ஞாயிறு மாலை ய(ஜ)ன்னல் அருகிலிருந்து அ(ஆ)ப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில் லயித்து இருந்தேன்
சின்ன உடலில் என்ன வேகம் சிலிர்ப்பும் வாலின் விசுக்கலும் விடுவிடென அங்குமிங்கும் நோக்கலும் செயலில் முனைப்பும்
ஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில் எத்தனை பிஞ்சுகளோ…?
லயிப்பில் இழப்பின் நெருடலும்
தொலைவில் அப்போது அந்தச் சத்தம் முதலில் மெல்ல பின்சற்றுப் பலமாய் ஓம்! ஹெலியேதான்! ”
ராணி பிள்ளைகளைக் கொண்டு பங்கருக்குள் ஓடு
ஒரு கணச் சுதாகரிப்பில் இருப்பின் தெளிவில் நிம்மதிப் பெருமூச்சு
சே எத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி எங்கிருந்தாலென்ன பிரக்ஞையற்ற கணங்களில்
அந்தச் சத்தம் என்னமாய் மனதை உலுக்கி எடுக்கிறது
அணிலின் அழகும் லயிப்பும் எங்குபோய் ஒழிந்தன

-மு புஷ்பராஜன்-
நன்றி: சுபமங்களா