சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

தினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்


இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்
ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை
அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்
அரக்கர் கூட்டம்

கைக்கெட்டும் தூரத்தில்
எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு

கேட்காமல் கேட்கும்
எம் உறவுகளின் ஓலங்கள்

இவன் வாழும் நாடோ காந்தியின்
அகிம்சை வழி

நேருவின் சமாதனப்புறா-அதுவோ
முதுகில் அடித்தவனை
முழுவதும் தொழும்

தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?

கூட்டுப் பயிற்சியும்
கொஞ்சிக்குலாவலும்
நம் குல நாசம்
செய்வதற்கேயன்றி வேறெதற்கு?

ரகசியப் பேச்சுக்களும்
ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற
ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்
நலிவடைந்த உறவுகளை
நசுக்கத்தானே?

சமாதானம் என்று சொல்லி
சவ வண்டியனுப்பும்
சறுக்கிய தேசத்தின்
ஆற்றாமைத் தமிழன்
அழுகிறான் இங்கே
அவனுக்கு நாடிதுவே
வேறில்லை அவனியிலே

கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்
கயவர்கள் கூட்டம்
கட்சிக்கொடி ஏந்திக்
கல்லாக்கட்டும்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழன்
ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்
உடுக்கை மானம் உண்டோ அறியேன்…

அத்திவெட்டி ஜோதிபாரதி
jothibharathi@yahoo.com