உங்களுக்குப் புரியுதா?

questionஎன் பெயர் விக்னேஷ். எனக்கு ஒரு பிரச்சினை.  இல்லை, இல்லை, எல்லாமே பிரச்சினைதான்.

நான் பேசுறத யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. சிரிக்கிறாங்க. அப்புறம் அவங்கவங்க வேலையை பார்க்க போயிடறாங்க. நான் தனியாவே படுத்து கிடக்கணும்.

என்னாலே நடக்கவும் முடியாது. கை, காலை ஆட்டி முயற்சி பண்ணியும் பார்த்துட்டேன். ஒண்ணும் முடியலே. எனக்குத் தேவையானதை எல்லாம் எங்க அம்மாவும் அப்பாவும்தான் செய்யணும். படுக்கையிலேயே அசிங்கம் பண்ணிடுவேன். அதை சுத்தம் பண்ணுவாங்க. என்னை குளிப்பாட்டி, டிரஸ் பண்ணிவிட்டு, எனக்கு தேவையானதையெல்லாம் செய்து அழகு பாக்குறது அவங்க மட்டும்தான்.

மத்தவங்க எப்பவாவது எனக்கு ஒண்ணு ரெண்டு உதவிகள் செய்வாங்க. நிறையபேர் என்னைப் பார்க்க வருவாங்க. எனக்கு ஏதாவது பொருள்களையும் வாங்கிட்டு வருவாங்க. ஆனாலும் அதையெல்லாம் என்னால உபயோகப்படுத்த முடியாது.

நான் பேசுறத கேட்டு புரிஞ்ச மாதிரி தலைய ஆட்டி ஆட்டி “அப்படியா?”னு கேப்பாங்க.  அப்புறம் அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ என்ன சொல்றான்னு கேப்பாங்க. அதுதான் எனக்கு கோபமா வரும். நான் சொல்லி எல்லோரும் புரிஞ்சிக்கிற ஒரே வார்த்தை “ங்கா” மட்டும்தான். நான் பொறந்து மூணு மாசம்தாங்க ஆவுது.  நான் பேசுறது உங்களுக்காவது புரியுதா?

– நீலவண்ணன்